புதிய தலைமுறைக்காக ஆ.பழனியப்பன்
இணையம், மின்னஞ்சல், அலைபேசி என தகவல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்த நிலையிலும், தபால் சேவைக்கான அவசியமும் தேவையும் இன்னும் குறையவில்லை. கவுன்சலிங் தகவலுக்காகக் காத்திருக்கும் மாணவர்கள், இன்டர்வியூவை எதிர்நோக்கும் இளைஞர்கள், ஓய்வூதியத்தை எதிர்பார்க்கும் முதியோர்கள் என தபால்காரர்களின் வருகைக்காக தினமும் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை பல கோடி. ஆகையால்தான், ஒன்றரை லட்சம் அஞ்சலகங்களுடன், உலகிலேயே மிகப்பெரிய அஞ்சல் துறையாக இந்திய அஞ்சல் துறை திகழ்கிறது.
ஆறு லட்சம் ஊழியர்களின் மகத்தான உழைப்பு இல்லாமல், இத்தகைய பெருமைக்கும், வளர்ச்சிக்கும்,
சாதனைக்கும் சாத்தியமே இல்லை. மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும், மக்களைத் தேடித்
தேடி அவர்கள் ஆற்றி வருகிற சேவை போற்றத்தக்கது. அதேவேளையில், மக்கள் சேவகர்களாகி தபால்
ஊழியர்கள் நாள்தோறும் சந்திக்கும் சவால்களும், படும் சிரமங்களும் ஏராளம்.