June 03, 2013
Kalaivaraikalai
இந்திய பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார்
தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில்
மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும்,
பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும்
நெகிழ்ச்சியான நிமிடங்கள்.
இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.
கரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப்
பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது
மீண்டும் கரகோஷம். டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, மகிழ்ச்சியே !
முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர்.
சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர்.
"தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி.
850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின்
ஆராய்ச்சி நூல்.
விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்திய சரித்திரம், இந்திய சரித்திரத்தில் அரசுமுறை முதலிய பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர்.
தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார்.
நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா? தமிழுக்கு இவர்கள் தரும் மரியாதை இதுதானா?
(தினமணியில் கலாரசிகன்)
0 comments:
Post a Comment