Monday 4 January 2016

மத்திய அரசு GDS கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் - G.K. வாசன்

              மத்திய அரசு கிராம தபால் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்
               நம் நாட்டில் ஆரம்பக் காலம் முதல் இன்று வரை கிராமம் முதல் நகரம் வரை வாழும் மக்கள் செய்தியை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் தபால்களை பயன்படுத்துகிறார்கள். இந்த தபால்கள் அனைத்தையும் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை தபால் நிலைய ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இதற்காக தபால் நிலையங்களில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

நகர்புற தபால் நிலையங்களிலும் பணி நிரந்தரம் செய்யப்படாத ஊழியர்கள் பலர் பணிபுரிகிறார்கள். இந்தியாவில் சுமார் 1 இலட்சத்து 52 ஆயிரம் தபால் நிலையங்கள் உள்ளன. இவற்றில் கிராம தபால் நிலைய ஊழியர்களாக சுமார் 2 இலட்சத்து 92 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கிராம தபால் நிலைய ஊழியர்களாக வேலை செய்கிறார்கள். குறிப்பாக கிராமப் புற அஞ்சல் நிலையங்களில் பணிபுரியும் 90 சதவீதம் கிராம அஞ்சல் நிலைய ஊழியர்கள் பல ஆண்டுகாலமாக தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

                குறிப்பாக பணி நிரந்தரம், நிரந்தர பணியாளர்களுக்கு உள்ள அனைத்து சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். பணப்பயன், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் போராடி வருகிறார்கள். மேலும் 7 ஆவது ஊதியக் குழுவில் இவர்களது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருப்பது இவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

                தற்போது மத்திய அரசு ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரியைக் கொண்ட ஒரு நபர் தனிக்குழு அமைத்திருக்கிறது. இந்த ஒரு நபர் தனிக்குழு கிராம அஞ்சல் நிலைய ஊழியர்களின் கோரிக்கைகளை பரிந்துரை செய்யுமா, அதனை மத்திய அரசு நிறைவேற்றுமா என்பது போன்ற சந்தேகங்கள் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே மத்திய அரசு நீண்ட காலமாக போராடி வரும் கிராம தபால் நிலைய ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் ஒரு காலக்கெடுவிற்குள் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

G.K. வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms