Saturday, 5 November 2016

இன்று கந்த சஷ்டி திருவிழா

அதர்மத்தை அழிந்து  தர்மத்தை நிலைபெற்றிட 
சூரஸம்ஹர மூர்த்தியை வணங்குவோம்.
குறிஞ்சி நிலத் தெய்வமாகப் போற்றப்படுகின்ற முருகப்பெருமானுக்கு, தமிழகத்தில் பல திருத்தலங்கள் இருந்தாலும், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு தலங்கள் முருகனின் ஆறுபடைவீடுகளாக கருதப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. போர் புரியச் செல்லும் தளபதி தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் ‘படைவீடு' என்றழைக்கப்படுகிறது. அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் வேல் கொண்டு படைவீடு அமைத்து தங்கியிருந்த தலம், இரண்டாம் படைவீடாக கருதப்படுகின்ற திருச்செந்தூர் ஆகும்.
ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்துவீடுகள் மலைக்கோவிலாகவும் அமைந்துள்ளதாக தோன்றினாலும், திருச்செந்தூரும் மலைக்கோயிலே ஆகும். புராணகாலத்தில், இத்திருத்தலத்திற்கருகே சந்தன மலை அமையப் பெற்றிருக்கின்றது. இதனால் ‘கந்தமாதன பர்வதம்' என இத்திருத்தலம் அழைக்கப் பெற்றிருக்கிறது. காலப்போக்கில் குன்று மறைந்து விட்டாலும், திருக்கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளிக் குகைக்கு அருகிலும் சந்தனமலை இருந்ததை அடையாளப்படுத்தும் வகையில் சிறுகுன்று இன்றும் அமையப் பெற்றுள்ளது.
ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை வெற்றி கொண்டு முருகப்பெருமான் ஆட்கொண்ட தலம் என்பதால், வருடந்தோறும் இங்கு நடைபெருகின்ற கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி.
கந்த சஷ்டி வரலாறு
சூரபத்மன் தன் தம்பியர்களுடன் குலகுருவாகிய சுக்கிராச்சாரியரிடம் உபதேசம் பெற்று, கடுமையான தவம் புரிந்து சிவபெருமானிடம் 1008 அண்டங்களையும் ஆளும் வரம், யாராலும் அழிக்க முடியாத வஜ்ஜிரதேகம், இந்திர ஞாலத்தோர் நினைத்த நேரத்தில் நினைத்த வடிவம் எடுக்கும் அரியவரம் பலவும் பெற்றான். சிவபெருமான் தனது சக்தியன்றி வேறு யாராலும் அழிவு கிடையாது என்று வரமருள, தேவர்களுக்குப் பலவகையான இன்னல்களைக் கொடுக்க ஆரம்பித்தான் சூரபத்மன்.
தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வேண்டினர். அவர் ஆறு சுடர்களை உருவாக்கி, அதனை வாயுதேவன் மற்றும் அக்னிதேவனிடம் கொடுத்து கங்கையில் சேர்க்குமாறு சொல்ல, கங்கை அச்சுடரினை சரவணப் பொய்கையில் சேர்த்தது. ஆறுதாமரை மலர்களில் ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து தவழ்ந்து விளையாடத் தொடங்க, கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர்.
அன்னை பராசக்தி ஆறு குழந்தைகளையும் வாரி எடுத்துப் பரிவுடன் அணைத்து ஒரு உருவமும், ஆறுமுகமுமாக ஆக்கி கந்தனென்று பெயரிட்டு, ஞானசக்தியாகிய வேலாயுதத்தினை தந்தார். அதனால் திருச்செந்தூரில் படைவீடு அமைத்து, சூரனுடன் போரிட்டு தனது மறக்கருணையினால் சேவலும், மயிலுமாக ஆட்கொண்டார்.
கந்த சஷ்டி திருவிழா - 2017
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றுள் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா 31-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. ஆறாம் திருநாளான வருகிற 5-ம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms